மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்த ரஷ்ய சுகாதார அமைச்சர் மிக்கைல் முராஷ்கோ (Mr.Mikhail Murashko) உள்ளிட்ட தூதுக்குழுவினர் தமது உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்து 05.05.2026 அன்று காலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நாட்டை விட்டு புறப்பட்டனர்.
இலங்கை – ரஷ்ய உறவுகளை வலுப்படுத்திய உத்தியோகபூர்வ விஜயத்திற்குப் பிறகு புறப்பட்டுச் செல்லும் குழுவினருக்கு பிரியாவிடை அளிப்பதற்காக, சுகாதார பிரதி அமைச்சர் டாக்டர்.ஹன்சக விஜேமுனி மற்றும் சுகாதார அமைச்சகத்தின் சர்வதேச சுகாதாரப் பணிப்பாளர் டாக்டர்.அனில் சமரநாயக்க ஆகியோர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் (BIA) சிறப்பு வளாகத்திற்கு வருகை தந்தனர்.
இலங்கைக்கான ரஷ்ய தூதர் லெவன் ஜகரேயனும் இந்நிகழ்வில் கலந்துகொண்டார். ரஷ்யா நாட்டு சுகாதார அமைச்சர் உட்பட குழுவினர், மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, ரஷ்யாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான சுகாதாரத் துறையில் உறவுகளையும் ஒத்துழைப்பையும் வலுப்படுத்துவது குறித்து சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர்.நளிந்த ஜயதிஸ்ஸவுடன் ஒரு விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
நாட்டில் ஆரம்ப சுகாதாரப் பராமரிப்பின் அபிவிருத்தி மற்றும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்களைக் பயன்படுத்தி நாட்டின் சுகாதாரப் பராமரிப்பை வலுவூட்டுவது குறித்து கலந்துரையாடல்கள் நடைபெற்றன.
ரஷ்ய சுகாதார அமைச்சர் உள்ளிட்ட குழுவினர், 04.05.2026 அன்று கொழும்பு தேசிய மருத்துவமனை மற்றும் கொழும்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தையும் பார்வையிட்டனர்.
இப் பயணத்தின் போது, தூதுக்குழுவினர் இலங்கை தேசிய மருத்துவமனையின் புதிய வெளிநோயாளர் பிரிவின் அவசர சிகிச்சை பிரிவு அத்துடன் கொழும்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடம் ஆகியவற்றையும் பார்வையிட்டனர்.
புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சுகாதார சேவைகளை மேம்படுத்துவதை ஆராய்வதே இந்த விஜயத்தின் பிரதான நோக்கமாக காணப்பட்டது. இந்த மூன்று நாள் பயணத்தின் போது, ரஷ்யாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான சுகாதாரத் துறையில் உறவுகளையும் ஒத்துழைப்பையும் வலுப்படுத்துவது தொடர்பான பல முக்கிய விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.
அவற்றுள், மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள், மருத்துவ நிபுணர்களின் பயிற்சி மற்றும் கல்விசார் ஒத்துழைப்பு, ஆயுர்வேத மருத்துவத் துறை, கணினி மயமாக்கல் மற்றும் சுற்றுலா மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு சம்பந்தமான துறைகளுக்கு இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டது.





இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










