சிறுநீரக நீர்கட்டி பாதிப்பிற்குரிய சிகிச்சை…..
எம்மில் பலரும் சிறுநீரகத்தில் கற்களால் ஏற்படும் பாதிப்பை உணர்ந்திருப்பர். சிலர் சிறுநீரகத்தில் ஏற்பட்ட பாதிப்பின் காரணமாக அதற்குரிய சிகிச்சையையும் மேற்கொண்டிருப்பர்.
ஆனால் சிலருக்கு சிறுநீரகப் பகுதியில் சிஸ்ட் எனப்படும் நீர்க்கட்டி பாதிப்பு ஏற்படக்கூடும். இதற்கு தற்போது நவீன மருத்துவ தொழில் நுட்பங்களுடன் கூடிய சிகிச்சை அறிமுகம் ஆகி முழுமையான நிவாரணத்தை அளித்து வருவதாக வைத்திய நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
எம்மில் சிலருக்கு சிறுநீரை வெளியேற்றும் போது அதில் குருதி கலந்தோ அல்லது எரிச்சலுடனோ அல்லது பாரிய அசௌகரியத்துடனோ இருந்தால்.. உங்களுக்கு சிறுநீரகத்தில் நீர்க்கட்டி பாதிப்பு ஏற்பட்டிருக்க கூடும் என அவதானிக்கலாம். சிலருக்கு இத்தகைய தருணங்களில் அவர்களுடைய குருதி அழுத்த பாதிப்பு சீரற்றதாகவும், மார்பக விலா எலும்பு பகுதியில் வலியும் இருக்கும்.
இத்தகைய தருணங்களில் அருகில் உள்ள வைத்தியசாலைக்குச் சென்று வைத்தியர்களை சந்தித்தால்.. அவர்கள் அடிவயிற்று பகுதிக்குரிய அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் என பரிந்துரைப்பார்கள். இந்த பரிசோதனையின் முடிவின் அடிப்படையில் உங்களுடைய சிறுநீரகத்தில் ஏற்பட்டிருக்கும் நீர்க்கட்டி எத்தகையது என்பதனை வரையறை செய்வார்கள்.
சிலருக்கு சிறிய அளவில் ஒரு கட்டியோ அல்லது இரண்டு கட்டியோ ஏற்பட்டிருக்கக்கூடும். சிலருக்கு இரண்டு சிறுநீரகங்களிலும் சிக்கலான அளவில் அளவில் பெரியதான நீர்க்கட்டி ஏற்பட்டிருக்கக்கூடும். இதனை வைத்தியர்கள் மேலும் துல்லியமாக அவதானிக்க சி டி ஸ்கேன் எனும் பரிசோதனையை மேற்கொள்ள பரிந்துரைப்பார்கள். இத்தகைய பரிசோதனையின் முடிவில் உங்களுடைய சிறுநீரகத்தில் ஏற்பட்டிருக்கும் நீர்க்கட்டியின் அளவை துல்லியமாக அவதானிப்பர்.
வெகு சிலருக்கே இத்தகைய பாதிப்பு பரம்பரையாக மரபணு குறைபாட்டின் காரணமாக ஏற்படக்கூடும். இதற்கு வைத்தியர்கள் நவீன மருத்துவ தொழில்நுட்பத்துடன் கூடிய சத்திர சிகிச்சை மற்றும் பிரத்யேக மருந்தியல் சிகிச்சையை வழங்கி முழுமையான நிவாரணத்தை அளிப்பர்.
வைத்தியர் யோகேஷ்


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










