Clean Sri Lanka எண்ணக்கருவின் கீழ், நாடு முழுவதும் சுற்றாடல் மற்றும் சமூக ரீதியாக உயர்ந்த விழுமியங்களைக் கொண்ட, டிஜிட்டல் சேவை வசதிகளுடன் கூடிய புதிய மாதிரி நகரங்களை (Model Cities) உருவாக்குவதற்காக திட்டமிட்டு வருவதுடன், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவின் தலைமையில், 28.05.2026 அன்று ஜனாதிபதி செயலகத்தில் Clean Sri Lanka செயலணி கூடிய போதே இந்தத் தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.
இந்த நகர அபிவிருத்தித் திட்டத்தை மிகவும் நடைமுறைச் சாத்தியமான மற்றும் விஞ்ஞான பூர்வமான அடிப்படையில் செயல்படுத்துவதற்காக, மொறட்டுவ பல்கலைக்கழகத்தின் முழுமையான தொழில்நுட்ப ஆதரவைப் பெற்றுக் கொள்ள இங்கு தீர்மானிக்கப்பட்டது. இதற்கு இணையாக, நகர வடிவமைப்பு தொடர்பாக சர்வதேச தரத்திற்கு ஏற்ப வழிகாட்டல்களைத் தயாரிப்பதற்காக விசேட நிபுணர் குழுவும் நியமிக்கப்பட்டது.
மொறட்டுவ பல்கலைக்கழகத்தின் கலாநிதி சிதுமினி ரத்னமலல தலைமையில் Clean Sri Lanka செயலணியின் உறுப்பினர்கள் சிலர் மற்றும் இத்துறை சார்ந்த நிபுணர்கள் உள்ளடக்கிய வகையில் விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளது.
இந்த செயற்திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ், உலகிலுள்ள வெற்றிகரமான நகர வடிவமைப்பு மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டு இந்தக் குழுவினால் தயாரிக்கப்படும் விஞ்ஞான பூர்வமான வழிகாட்டல்களின் அடிப்படையில், சில மாதிரி நகரங்கள் நடைமுறையில் உருவாக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது. அதன் பின்னர், நாட்டின் ஏனைய நகரங்களை நவீனமயப்படுத்த விஞ்ஞான பூர்வமான வழிகாட்டல்களைத் தயாரிப்பதற்கு எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மாதிரி நகரத் திட்டமானது வெறும் பௌதீக ரீதியான அபிவிருத்தியுடன் மாத்திரம் மட்டுப்படுத்தப்படாது Clean Sri Lanka தேசிய வேலைத்திட்டத்தின் முதன்மை நோக்கங்களுக்கு அமைய, இந்த நகரிங்களில் வசிக்கும் மக்கள் உயரிய விழுமியங்களைக் கொண்ட ஒரு சமூகமாக கட்டியெழுப்புவதில் விசேட கவனம் செலுத்தப்படுகிறது. அதன்படி, உயரிய மனிதாபிமான மற்றும் சமூக விழுமியங்களைக் கொண்ட, ஒருவரையொருவர் மதிக்கும் நல்லதொரு நகர்ப்புற சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்கும், சூழலுக்கு உகந்த எண்ணக்கருக்களை அடிப்படையாகக் கொண்ட, தூய்மையான நகர்ச் சூழலை உருவாக்குவதற்கும் எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன், பொதுமக்களுக்குத் தேவையான சேவைகளை விரைவாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் வழங்குவதற்காக, நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய பரந்த ஈ-சேவை வலையமைப்பொன்றை நகரத்திற்குள் நிறுவுவதற்கும் எதிர்பார்க்கப்படுகிறது.
கழிவு முகாமைத்துவத்தை, விஞ்ஞானபூர்வமாகவும் முறையாகவும் செயற்படுத்த ஆலோசனை வழங்குவதற்கு நிபுணர் குழுவொன்றை நியமித்து, அதனை நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளன.
இந் நிகழ்வில் Clean Sri Lanka செயலகத்தின் அழைப்பாளர், ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரசல் அபொன்சு மற்றும் அந்த நிறுவனத்தின் பணிப்பாளர்கள், இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ, விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் வாசு பந்து எதிரிசிங்க, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் காஞ்சன பானகொட ஆகியோருடன் Clean Sri Lanka செயலணியின் அங்கத்தவர்களும் கலந்துகொண்டனர்.
(ஜனாதிபதி ஊடகப் பிரிவு)













இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










