1,500 பாடசாலை விளையாட்டு வீரர்களுக்கு போஷாக்கு கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

பாடசாலை விளையாட்டு வீர, வீராங்கனைகளை ஊக்குவிப்பதற்காக நடைமுறைப்படுத்தப்படும் ‘விளையாட்டு சக்தி’ (கிரீடா சக்தி) நிதியத்தின் ஊடாக, 1,500 பாடசாலை விளையாட்டு வீர, வீராங்கனைகளுக்கு தலா ரூ. 10,000 போஷாக்கு கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு 08.06.2026 அன்று இளைஞர் விவகார மற்றும் விளையாட்டு அமைச்சில் நடைபெற்றது.

இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், முதற்கட்டமாக 100 பாடசாலை விளையாட்டு வீர, வீராங்கனைகளுக்கு அடையாள ரீதியாக இக்கொடுப்பனவு வழங்கி வைக்கப்பட்டது.

மாகாண மட்டத்திலான விளையாட்டு அணிகளில் உள்ள 15 வயதுக்குட்பட்ட கரப்பந்தாட்டம், வலைப்பந்தாட்டம், கால்பந்து, தடகளம் ஆகிய விளையாட்டுகளில் ஈடுபடும் மாணவர்களும், அகில இலங்கை பாடசாலை விளையாட்டுப் போட்டிகள் மற்றும் தேசிய மட்டத்தில் திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்களும் இதில் உள்வாங்கப்பட்டுள்ளனர். இதற்கமைய ஜிம்னாஸ்டிக்ஸ், பளுதூக்குதல், பெட்மிண்டன், மேசைப்பந்து, மல்யுத்தம், குத்துச்சண்டை, கராத்தே-டோ, ஜூடோ, ஹாக்கி, நீச்சல், கூடைப்பந்து, கபடி,, ஸ்குவாஷ், கெரம் ஆகிய விளையாட்டுப் போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்திய வீர, வீராங்கனைகளுக்கும் இக்கொடுப்பனவு வழங்கப்படுகிறது.

இளைஞர் மற்றும் இளையோர் மட்டத்தில் விதிவிலக்கான திறமைகளைக் கொண்ட விளையாட்டு வீரர்களை அடையாளம் கண்டு, அவர்களின் பயிற்சிகளுக்குத் தேவையான வசதிகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு இந்த ‘விளையாட்டு சக்தி’ திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன்கீழ் மார்ச் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை மாதத்திற்கு ரூ. 10,000 வீதம் மொத்தம் ரூ. 1 இலட்சம் போஷாக்கு கொடுப்பனவாக வழங்கப்படுகிறது. அத்துடன், முறையான நீண்டகால பயிற்சியின் மூலம் தேசிய விளையாட்டு அணிகள் மற்றும் உயர் செயல்திறன் அணிகளில் இணைவதற்கான வாய்ப்பை ஏற்படுத்துதல், தேசிய மட்டத் திறமைகளின் அடிப்படையில் சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்பதற்கான வாய்ப்புகளை வழங்குதல், விளையாட்டில் இரண்டாம் நிலை அணியைப் பராமரிப்பதன் மூலம் விளையாட்டுத் துறையின் வளர்ச்சிக்கு ஆதரவளித்தல் மற்றும் விளையாட்டு வீரர்களின் பயிற்சிகளின் போது ஏற்படும் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு நிவாரணம் வழங்குதல் ஆகிய நோக்கங்களையும் இத்திட்டம் கொண்டுள்ளது.

கல்வி அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட 2025 தேசிய பாடசாலை விளையாட்டுப் போட்டிகளின் வெற்றிகள், தேசிய மற்றும் சர்வதேச தரவரிசைகளின்படி பெற்றுக்கொண்ட புள்ளிகள் மற்றும் மாகாண பாடசாலை விளையாட்டுப் போட்டிகளின் வெற்றிகளின் அடிப்படையில் இந்த விளையாட்டு வீர, வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

மேலதிக தேர்வு முறையாக, சர்வதேச போட்டிகளில் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களைப் பெற்ற குழு மற்றும் தனிநபர் போட்டிகளின் விளையாட்டு வீர, வீராங்கனைகள், தேர்வுக் குழுவின் பரிந்துரையின் பேரில் ‘விளையாட்டு சக்தி’ திட்டத்திற்கு தகுதி பெற்றுள்ளனர்.

நிகழ்வில் உரையாற்றிய இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே,

பாடசாலை விளையாட்டு வீர, வீராங்கனைகளுக்கு ஏதேனும் சிரமங்கள் அல்லது விளையாட்டு உபகரணங்களின் பற்றாக்குறை காணப்படின், அது குறித்து நேரடியாக அமைச்சுக்கு அறிவிக்குமாறு கேட்டுக்கொண்டார். அத்தகைய விளையாட்டு வீரர்களுக்குத் தேவையான வசதிகளை வழங்க அமைச்சு தயாராக இருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

விளையாட்டுத்திறன் மிக்க நற்பிரஜைகளை உருவாக்கும் நோக்கில், பாடசாலை விளையாட்டு வீரர்களுக்குத் தேவையான வசதிகளை வழங்கவும், வழிகாட்டல்களை வழங்கவும் அமைச்சு திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார். விளையாட்டு சக்தி திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு 760 பேருக்கு இக்கொடுப்பனவு வழங்கப்பட்டதாகவும், இந்த ஆண்டு அந்த எண்ணிக்கை இரு மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

இந் நிகழ்வில் உரையாற்றிய இளைஞர் விவகார பிரதி அமைச்சர் தினிந்து சமன் ஹென்னாயக்க,

நாட்டின் விளையாட்டை மேம்படுத்த வேண்டுமானால் பாடசாலை விளையாட்டு வீர, வீராங்கனைகளுக்கு கைகொடுப்பது இன்றியமையாதது எனத் தெரிவித்தார்.

பொருளாதாரத் இன்னல்கள் காரணமாக எந்தவொரு விளையாட்டு வீரரும் பின்வாங்கக் கூடாது என்றும், பாடசாலை விளையாட்டை மேலும் மேம்படுத்தும் நோக்கில் பாடசாலை விளையாட்டு வீரர்களுக்காக இத்திட்டம் செயல்படுத்தப்படுவதாகவும் பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் இளைஞர் விவகார பிரதி அமைச்சர் தினிந்து சமன் ஹென்னாயக்க, இளைஞர் விவகார மற்றும் விளையாட்டு அமைச்சின் செயலாளர் அருண பண்டார, விளையாட்டு மேம்பாட்டுத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் எஸ். அச்சுதன், தேசிய விளையாட்டுச் சபையின் தலைவர் பிரியந்த ஏகநாயக்க ஆகியோர் கலந்துகொண்டனர்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇


Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects