அனர்த்த பாதுகாப்பான சமூகத்தை உருவாக்குவோம் எனும் தொனிப்பொருளில் “இனவிருத்தி சுகாதாரம்” எனும் தலைப்பில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்ஷினி ஸ்ரீகாந்த்தனின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலில் ,மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் எம்.எ.சீ.எம். றியாஸ் தலைமையில் , மட்டக்ளப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் ஏற்பாட்டில் மூன்று நாள் செயலமர்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டு செயலமர்வின் ஆரம்ப நிகழ்வு மட்டக்களப்பில் அண்மையில் இடம்பெற்றது.
செயலமர்வின் ஆரம்ப நாள் நிகழ்வின் அதிதிகளாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஜீ.சுகுணன், எஃப்பீஏ (FPA) நிறுவனத்தின் பிரதிப்பணிப்பாளர் கமகே மற்றும் எஃப்பீஏ (FPA) நிறுவனத்தின் சிரேஸ்ட முகாமையாளர் எஸ்.எச்.இம்தியாஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டதுடன், இந்நிகழ்வில்
மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டிருந்தனர்.
இயற்கை அனர்த்தங்களின்போது ஏற்படும் பாதிப்புகளைக் குறைத்தல் மற்றும் அதன் அனர்த்தத்திற்கு தாக்குப் பிடிக்கக்கூடிய சமுகத்தைக் கட்டியெழுப்புதல், கிராம மட்டங்களில் இயற்கை அனர்த்த தயார்படுத்தல், அனர்த்தக் குறைப்பு, அவசரகால நடவடிக்கைகளில் ஈடுபடுத்தல் மற்றும் அனர்த்தத்தின் போதான இனவிருத்தி சுகாதாரம் போன்ற விடயங்களை மையப்படுத்தியவாறு இடம்பெறவுள்ளது.
இச்செயலமர்வில் பிரதேச செயலகப் பிரிவுகளில் கடமையாற்றும் அரச உத்தியோகத்தர்கள் மற்றும் தனியார் துறை உத்தியோகத்தர்கள் என பலருக்கு பயிற்சியளிக்கப்படயிருக்கின்றனர்.
மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினால் அனர்த்த முகாமைத்துவ சட்டம், அவசர கால நிலைமையில் எவ்வாறு செயற்படுதல், முதலுதவி, நீச்சல் பயிற்சி மற்றும் அனர்த்தங்களை தடுத்தல் போன்ற பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பாக தொடர்ச்சியாக பல்வேறுபட்ட சமூக மட்ட அமைப்புக்கள் மற்றும் இளைஞர் யுவதிகளை தேர்ந்தெடுத்து செயல்முறை பயிற்சிகளையும் வழங்கிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர… 👇👇