தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் புதிதாகப் பிறந்த இரண்டு சிங்கக் குட்டிகளை பொதுமக்கள் இந்த மாதம் 21 ஆம் திகதி வரை பார்வையிடலாம் என்றும், பாதுகாப்பு கருதி அதற்குப் பிறகு குட்டிகள் காட்சிக்கு வைக்கப்படாது என்றும் பணிப்பாளர் நாயகம் சந்தன ராஜபக்ஷ தெரிவித்தார்.
சிங்கக்குட்டிகள் வேகமாக வளர்ந்து வருவதால், அவற்றை பொதுமக்களின் பார்வைக்கு வெளியே கொண்டு வருவது மிகவும் ஆபத்தானதாக மாறிவருகிறது என்று கூறினார்.
கடந்த ஆண்டு டிசம்பர் 24 ஆம் திகதி அன்று பிறந்த ஆண் மற்றும் பெண் சிங்கக் குட்டிகள், பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து ஏராளமான பார்வையாளர்களை ஈர்த்து வருகின்றன.
இதே வேளை, குட்டிகளுக்குப் பெயரிடுமாறு விடுக்கப்பட்ட பொது வேண்டுகோளைத் தொடர்ந்து, மிருகக்காட்சிசாலைக்கு ஏராளமான பெயர் பரிந்துரைகளும் வந்துள்ளன.
தெஹிவளை மிருகக்காட்சிசாலையின் 90 வது ஆண்டு விழாக் கொண்டாட்டங்களுக்கு நெருங்கிய நேரத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பெயர்கள் அறிவிக்கப்படும் என்று ராஜபக்ஷ கூறினார்.
அதிகாரப்பூர்வ பெயர் சூட்டும் விழாவில் கலந்துகொள்ளும் வெற்றியாளர்களுக்குப் பரிசுகள் வழங்கப்படும் என்று அவர் மேலும் கூறினார்.
ஜூன் 21 ஆம் திகதியுடன் பார்வை காலம் முடிவடைவதற்குள் சிங்கக் குட்டிகளைப் பார்வையிட வருமாறு தெஹிவளை மிருகக்காட்சிசாலை பொதுமக்களை அழைத்துள்ளது.
இக் குட்டிகள் தினமும் காலை 10.00 மணி முதல் 11.30 மணி வரை பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










