சிறுபோகத்தில் நெல் கொள்வனவு செய்வது தொடர்பாக ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடல்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

சிறு போகத்திற்கான நெல் அறுவடை தற்போது ஆரம்பமாகியுள்ளதால், நெல் கொள்வனவு நடவடிக்கைகளை துரிதமாக ஆரம்பிக்குமாறும், அதற்காக தற்போது நெல் கையிருப்பிலுள்ள களஞ்சியசாலைகளை சந்தைக்கு விநியோகித்து, புதிய நெல்லைக் கொள்வனவு செய்வதற்கான ஆயத்தப் பணிகளை ‘சதொச’ நிறுவனத்துடன் இணைந்து மேற்கொள்ளுமாறும் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க விவசாய அமைச்சின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

சிறுபோகத்தில் நெல் கொள்வனவு செய்வது தொடர்பாக ஜனாதிபதி அலுவலகத்தில் 07.07.2026 அன்று நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதியின் செயலாளர் இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார்.

இம்முறை சிறுபோகத்தில் சுமார் 475,000 ஹெக்டெயர் நெல் வயல்களில் பயிரிடப்பட்டுள்ளதாகவும், எந்தவொரு காலநிலை மாற்றமும் இம்முறை நெற்செய்கைக்குப் பாதிப்பை ஏற்படுத்தவில்லை எனவும், இதனால் வெற்றிகரமான நெல் அறுவடை கிடைத்துள்ளதாகவும் இக்கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.

2026 சிறுபோகத்தில் நெல் கொள்வனவு செய்வதற்காக திறைசேரியினால் 6 பில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், இதற்கு மேலதிகமாக சிறு மற்றும் நடுத்தர அளவிலான நெல் ஆலை உரிமையாளர்களுக்குக் கடனாக வழங்குவதற்காக அரச வங்கிகள் மூலம் மேலும் 10 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.

நெல் சந்தைப்படுத்தல் சபை எதிர்வரும் 15ஆம் திகதி முதல் நெல் கொள்வனவு செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளதாகவும், அதற்காக மாவட்ட செயலாளர்களின் ஒத்துழைப்புடன் தேவையான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்ட கமத்தொழில், கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.

மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சின் செயலாளர் டி. பி. விக்ரமசிங்க,2024ஆம் ஆண்டில் நெல் ஆலை உரிமையாளர்களை அழைத்து நெல் விலையை அதிகரிக்க வேண்டாம் என்று கோர நேரிட்டது. தற்போது நெல் ஆலை உரிமையாளர்களை அழைத்து நெல் விலையைக் குறைக்க வேண்டாம் என்றே கூற வேண்டியுள்ளது.

கடந்த ஒன்றரை வருட காலத்தில் அதிக நெல் அறுவடையைப் பெற முடிந்தமையினாலேயே இந்த நிலை ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

மேலும், 2024ஆம் ஆண்டில் அரசாங்கத்திற்கு நெல்லை வழங்குமாறு விவசாயிகளிடம் கோரிக்கை விடுக்க வேண்டியிருந்ததாகவும், எனினும் விவசாயிகள் அதற்குச் சரியான முறையில் பதிலளிக்கவில்லை என்றும், ஆனால் தற்போது நெல் சந்தைப்படுத்தல் சபை நெல்லைக் கொள்வனவு செய்யும் வரை விவசாயிகள் காத்திருக்கும் நிலை உருவாகியுள்ளதாகவும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.

2025ஆம் ஆண்டின் சிறு மற்றும் பெரும் போகங்களில் 16 பில்லியன் ரூபா பெறுமதியான நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதுடன், தற்போது நெல் சந்தைப்படுத்தல் சபைக்குச் சொந்தமான களஞ்சியசாலைகளில் சுமார் 120,000 மெட்ரிக் தொன் நெல் கையிருப்பில் உள்ளது. அதில் சுமார் 60,000 மெட்ரிக் தொன்னை சந்தைக்கு விநியோகிப்பதற்காக விலைமனுக் கோரப்பட்டுள்ளதுடன், மேலும் 20,000 மெட்ரிக் தொன் நெல்லை சதொச நிறுவனத்திற்கு விநியோகிப்பதற்கும் தற்போது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகத் இதன் போது தெரிவிக்கப்பட்டது. அத்தோடு, தேவைக்கேற்ப கூட்டுறவுச் சங்கங்கள், கமத்தொழில் சேவைத் திணைக்களம் உள்ளிட்ட அரச நிறுவனங்களுக்குச் சொந்தமான களஞ்சியசாலைகளையும், தனியார் துறையின் களஞ்சியசாலைகளையும் வாடகை அடிப்படையில் பெற்றுக்கொள்வது குறித்தும் இதன் போது கலந்துரையாடப்பட்டது.

ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் கபில ஜனக பண்டார,கமத்தொழில், கால்நடை வளங்கள் , காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் செயலாளர் டி. பி. விக்ரமசிங்க, ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் என். எஸ். வனசிங்க, வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கே. ஏ. விமலேந்திரராஜா, நிதி அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பி. எம். கே. ஹெட்டியாரச்சி,நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் மஞ்சுள பின்னலந்த,கமத்தொழில் அபிவிருத்தி திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் தம்மிக ரத்னதுங்க, சதொச தலைவர் கோசல வில்பாவ ஆகியோர் இக்கலந்துரையாடலில் பங்கேற்றனர். அத்துடன், நெல் பயிரிடப்படும் மாவட்டங்களின் மாவட்ட செயலாளர்கள் மற்றும் தகவல் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் இணையவழினூடாக இதில் இணைந்திருந்தனர்.

(ஜனாதிபதி ஊடகப் பிரிவு)

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects