புவிசார் அரசியல் நெருக்கடி, சீரற்ற காலநிலை: இலங்கையின் தேயிலை ஏற்றுமதி 7% வீழ்ச்சி

புவிசார் அரசியல் நெருக்கடிகள் மற்றும் சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட உற்பத்தி வீழ்ச்சியால், கடந்த ஒக்டோபர் மாதத்தில் இலங்கையின் தேயிலை ஏற்றுமதி அளவு ஆண்டுக்கு ஆண்டு 7 சதவீதத்தால் குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை சுங்கத் திணைக்களத்தின் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு ‘ஃபோர்ப்ஸ் ரூ வோக்கர் ரிசர்ச்’ மற்றும் ‘சியக்கா ரிசர்ச்’ ஆகிய நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஒக்டோபரில் 21.9 மில்லியன் கிலோகிராமாக இருந்த தேயிலை ஏற்றுமதி, இவ்வாண்டு ஒக்டோபரில் 20.4 மில்லியன் கிலோகிராமாகச் வீழ்ச்சியடைந்துள்ளது.

இது கடந்த மூன்று மாதங்களில் பதிவான மிகக் குறைந்த ஏற்றுமதி அளவாகும்.

குறிப்பாக, தொடரும் ஈரான் நெருக்கடி மற்றும் உள்நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலை ஆகியவையே இந்த வீழ்ச்சிக்கு முக்கிய காரணங்களாகக் கூறப்படுகின்றன.

ஏற்றுமதி அளவு குறைந்த போதிலும், டொலர் அடிப்படையில் சராசரி ஏற்றுமதி விலை கடந்த ஆண்டின் 5.78 டொலரிலிருந்து 5.81 டொலராகச் சற்று அதிகரித்துள்ளது. ரூபா அடிப்படையில் இது கிலோ ஒன்றுக்கு 1,924.15 ரூபாவாக உயர்ந்துள்ளது. இம்மாதத்தில் மொத்தத் தேயிலை, உடனடித் தேயிலை மற்றும் பசுமைத் தேயிலை ஆகியவற்றின் ஏற்றுமதி வளர்ச்சியைப் பதிவு செய்துள்ள அதேவேளை, பொதியிடப்பட்ட தேயிலை மற்றும் தேயிலைப் பைகளின் ஏற்றுமதி வீழ்ச்சியடைந்துள்ளது.

2026 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் ஒட்டுமொத்த தேயிலை ஏற்றுமதி 5 சதவீதம் குறைந்து 209.8 மில்லியன் கிலோகிராமாகப் பதிவாகியுள்ளது. டொலர் வருமானம் 1.28 பில்லியனிலிருந்து 1.2 பில்லியன் டொலராகக் குறைந்த போதிலும், ஒட்டுமொத்த ரூபா வருமானம் 389.5 பில்லியன் ரூபாவாக சற்று அதிகரித்துள்ளது.

இவ்வாண்டின் முதல் பத்து மாதங்களில் இலங்கைத் தேயிலையை அதிகளவில் கொள்வனவு செய்யும் நாடுகளின் பட்டியலில் பாரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. துருக்கி 119 சதவீத வளர்ச்சியுடன் 38.8 மில்லியன் கிலோகிராம் தேயிலையைக் கொள்வனவு செய்து முதலிடத்தைப் பிடித்துள்ளது.

கடந்த ஆண்டு முதலிடத்தில் இருந்த ஈராக், 41 சதவீத சரிவுடன் இரண்டாம் இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. மூன்றாம் இடத்திலும், அஸர்பைஜான் நான்காம் இடத்திலும், சீனா ஐந்தாம் இடத்திலும் உள்ளன.

சிரியா, லிபியா, சிலி, சவூதி அரேபியா மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகள் முதல் பத்து இடங்களுக்குள் உள்ள ஏனைய நாடுகளாகும் என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects