தெற்காசியாவில் உள்ள ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் வீட்டு மின்சார செலவினங்கள் அதிகமாக உள்ளமை ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.
வெறிட்டே ரிசர்ச் என்ற ஆய்வு நிறுவனத்தினால் கடந்த டிசம்பர் மாதம் நடத்தப்பட்ட பகுப்பாய்வில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
இதன்படி, தெற்காசியாவில் உள்ள நாடுகளுக்கும் இலங்கைக்கும் இடையிலான மின்சார கட்டணத்தில் பாரிய ஏற்றத்தாழ்வுகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் மின்சார விநியோக செலவும் அதிகமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையில் உள்ள குடும்பங்கள், ஏனைய தெற்காசிய நாடுகளில் உள்ள மின்கட்டணத்தை விடவும் 2.5 முதல் 3 மடங்கு அதிகமாக மின்கட்டணத்தை செலுத்துகின்றன.
மாதாந்தம் 100 முதல் 300 வரையான மின்சார அலகுகளை பயன்படுத்தும் குடும்பங்களை அடிப்படையாக கொண்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளதாக வெறிட்டே ரிசர்ச் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய தெற்காசியாவின் ஏனைய நாடுகளில் 100 அலகு மின்சாரத்தை பெறுவதற்கு 2,078 ரூபாய் செலவிடப்படுகின்ற நிலையில் இலங்கையில் 5,280 ரூபாய் செலவிடப்படுவதாக அந்த நிறுனம் குறிப்பிட்டுள்ளது.
இலங்கையில் இந்த மாதத்தில் திட்டமிடப்பட்ட மின் கட்டண குறைப்பு இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் குறித்த கட்டண குறைப்பு 4 சதவீதம் அல்லது அதற்கு குறைவாக இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.
இது ஏனைய தெற்காசிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் மின்கட்டண சிக்கலை குறைந்த அளவிலேயே தீர்க்கும் என வெறிட்டே ரிசர்ச் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, தனியார் நிறுவனமான ரிவிதனவியிடம் இருந்து 100 மொகாவோட் மின்சாரத்தை கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தம் ஒன்று இன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.
குறித்த நிறுவனத்துக்கும் இலங்கை மின்சார சபைக்கும் இடையில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த திட்டத்துக்காக குறித்த நிறுவனம் 132 மில்லியன் அமெரிக்க டொலரை முதலீடு செய்துள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇