சிறுதானிய பயிர்ச்செய்கை ஊக்குவிப்புத் தொடர்பான கலந்துரையாடல்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

பெரும்போக நெற்செய்கையின் அறுவடையும் முடிவுக்கு வரும் நிலையில் விவசாயிகளை சிறுதானியப் பயிர்ச்செய்கைக்கு ஊக்குவிக்கவேண்டும். அதேநேரம் அந்த விளைபொருட்களுக்குரிய சந்தை வாய்ப்புக்களையும் உறுதிப்படுத்திக்கொள்ளவேண்டும்.

இந் நடவடிக்கைகளை மத்தி, மாகாணம் என்று பாராமல் எமது மக்கள் – விவசாயிகள் என்ற எண்ணத்துடன் அனைத்து திணைக்களங்களும் இணைந்து பணியாற்றவேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

சிறுதானிய பயிர்ச்செய்கை ஊக்குவிப்புத் தொடர்பான கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது.

வடக்கு மாகாண பிரதம செயலாளர், கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு மாவட்ட மாவட்டச் செயலர்கள், வடக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர், விவசாயப் பணிப்பாளர், மாவட்ட விவசாயப் பிரதிப் பணிப்பாளர்கள், நீர்பாசனத் திணைக்களப் பொறியியலாளர், விவசாய ஆராய்ச்சி மேலதிகப் பணிப்பாளர் உள்ளிட்ட பலர் இதில் பங்கேற்றனர்.

வடக்கு மாகாண ஆளுநர் ஆரம்ப உரையில், சிறுபோக நெற்செய்கைக்கு முன்னதாக சிறுதானியப் பயிர்ச்செய்கையை விவசாயிகளிடம் ஊக்குவிக்கவேண்டும். அவர்களுக்கு இதை ஊக்கப்படுத்துவதுடன் அவர்களுக்கான சந்தை வாய்ப்பையும் உரியவாறு ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும். மேலும் விவசாயிகளை பயிர்செய்கையில் ஈடுபடுமாறு கோரும் அதேவேளை, விவசாயிகளுக்கான தேவைப்பாடுகளைக் கேட்டறிந்து ஒவ்வொரு திணைக்களங்களும் ஏற்படுத்திக்கொடுக்கவேண்டும். அதேபோல கடந்த காலங்களில் இவ்வாறான சிறுதானியப் பயிர்ச்செய்கைக்காக ஏற்று நீர்பாசனங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. அதை மீளவும் முழு வீச்சில் ஆரம்பிக்கவேண்டும் என்று குறிப்பிட்டார்.

இதன் பின்னர் கருத்துத் தெரிவித்த வடக்கு மாகாண பிரதம செயலர் இ.இளங்கோவன், சிறுதானியப் பயிர்ச்செய்கையை முன்னெடுப்பதில் தரவுகளைப் பெற்றுக் கொள்வது சவாலாக இருப்பதாகக் குறிப்பிட்டார். சரியான தரவுகள் இல்லை எனத்தெரிவித்தார். தரவுகள் துல்லியமாக இருந்தால் மாத்திரமே, சிறுதானியப் பயிர்கள் உற்பத்தி செய்யப்படும் காலங்களில், இறக்குமதி செய்யப்படும் சிறுதானியங்களுக்கான வரியை அதிகரிக்குமாறு அரசாங்கத்திடம் கோரும் வாய்ப்பு உள்ளது என்றும் சுட்டிக்காட்டினார். மேலும் சிறுதானிய பயிர்ச்செய்கை முன்னெடுக்கப்படும் காலங்களில் கால்நடைகளை கட்டுப்படுத்தி வைத்திருக்கவேண்டியது அவசியம் எனவும் குறிப்பிட்டார்.

ஒவ்வொரு மாவட்டங்களிலும் எந்தெந்த சிறுதானியப் பயிர்ச்செய்கை எந்தளவு நிலப்பரப்பில் முன்னெடுக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது என்ற விவரங்களை மாவட்டச் செயலர்கள் முன்வைத்தனர். அதேநேரம் விதைப்புக்கான கால அட்டவணையை விவசாய ஆராய்ச்சிப் பிரிவு அறிவிக்கவேண்டும் என்றும் கோரினர். அதேபோன்று சிறுதானியப் பயிர்ச்செய்கைக்கான காப்புறுதி தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட வேண்டும் என மாவட்டச் செயலர்கள் கேட்டுக்கொண்டனர்.

இங்கு மேற்கொள்ளப்படும் சிறுதானிய உற்பத்திப் பொருட்களின் தரம், இறக்குமதி செய்யப்படும் சிறுதானியங்களின் தரத்தைவிட குறைவாக இருப்பதால் பொதுமக்கள் இறக்குமதி செய்யப்படும் சிறுதானியங்களை நாடுவதாகத் தெரிவிக்கப்பட்டது. எனவே தரத்தை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஆளுநர் பணித்ததுடன், கைவசம் உள்ள இயந்திரங்கள் மூலமாக அதை முன்னெடுக்குமாறும் கோரினார்.

தற்போது முல்லைத்தீவு மாவட்டத்தில் நிலக்கடலைக்கு பெறுமதிசேர் உற்பத்திப் பொருட்களாக மாற்றி விற்பனை செய்வதற்கும் ஏற்றுமதிக்குமான வாய்ப்பு உள்ளதால், நிலக்கடலையை விவசாயிகள் ஊக்கத்துடன் மேற்கொள்வார்கள் என்றும் அதேபோன்று ஏனைய சிறுதானியப் பயிர்களும் பெறுமதிசேர் உற்பத்திப் பொருட்களாக மாற்றப்பட வேண்டும் எனவும் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இது தொடர்பில் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள் ஊடாக நடவடிக்கை எடுப்பது தொடர்பில் ஆராயுமாறு கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளரை ஆளுநர் பணித்தார்.

தற்போது வயல்களில் பெருமளவு ஈரதன்மை இருப்பதாலும் குளங்களில் போதியளவு நீர் உள்ளமையாலும், சிறுதானியப் பயிர்ச்செய்கையில் கடந்த காலங்களைவிட அதிகளவு உற்பத்தியைப் பெற்றுக் கொள்ள முடியும் எனவும் அதை உரிய வகையில் சந்தைப்படுத்தவும் தேவையான நடவடிக்கைகளை இப்போதே திட்டமிடுமாறும் ஆளுநர் அதிகாரிகளுக்கு பணிப்புரைவிடுத்தார்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects