தற்போது நாட்டில் நிலவும் அனர்த்த சூழ்நிலையிலும், ஆறு மாதங்கள் வரையான குழந்தைகளுக்குத் தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும் என சுகாதார அமைச்சு தாய்மார்களுக்கு மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
தாய்ப்பாலே பாதுகாப்பானதும், முழுமையான ஊட்டச்சத்து நிறைந்த உணவுமாகும்.
இது குழந்தைகளுக்கு நீர்ச்சத்து, அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் அவசரகாலத்தில் உயிர்வாழ்வதற்குத் தேவையான நோயெதிர்ப்பு பாதுகாப்பை வழங்குவதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.
ஆறு மாதங்களுக்குக் குறைவான குழந்தைகளுக்குத் தண்ணீர் கூடத் தேவையில்லை என்றும், ஆறு மாதங்களுக்குப் பிறகே மேலதிக உணவுகளுடன் தாய்ப்பால் தொடர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில், குழந்தைகளுக்கான பால்மா மற்றும் பால் போத்தல்கள் குறித்து விளம்பரப்படுத்தல் அவற்றை விநியோகித்தல் குறித்து சுகாதார அதிகாரிகள் கவலை தெரிவித்தனர்.
இவ்வாறான நடைமுறைகள் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு ஆபத்தை ஏற்படுத்துவதாக அமைச்சு எச்சரித்தது.
இந்நிலையில், வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து பால்மா மற்றும் போத்தல்களை விநியோகிப்பது குழந்தைகளின் ஆரோக்கியத்திற்குத் தீங்கு விளைவிக்கும் என குடும்ப சுகாதாரப் பணியகத்தின் வைத்தியர் சந்திம சிறிதுங்க எச்சரித்துள்ளார்.
அத்துடன், நன்கொடையாளர்கள் அவற்றைத் தவிர்த்துவிட்டு, அதற்குப் பதிலாகத் தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு வசதியாக தாய்ப்பால் வழங்குவதற்கு ஏற்ற ஆடைகள், சாய்வு நாற்காலிகள் மற்றும் சூடான குழந்தை ஆடைகள் போன்றவற்றை வழங்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










