கடந்த காலங்களில் ஏற்பட்ட டிட்வா அனர்த்தத்தினால் இலங்கையின் உட்கட்டமைப்பு வசதிகள், குறிப்பாக புகையிரதப் பாதைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.
அரசாங்கத்தின் “Rebuilding Sri Lanka” தேசியத் திட்டத்தின் கீழ், இந்தப் பாதைகளை மீளக் கட்டியெழுப்பும் பணிகள் தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
கொழும்பிலிருந்து பதுளை வரை செல்லும் இலக்கம் 01 மலையகப் பாதையில், நானுஓயா மற்றும் அம்பேவெல இடையே உள்ள எல்ஜின் (Elgin) நீர்வீழ்ச்சிக்கு அருகாமையில் நடைபெற்று வரும் இறுதிப் கட்டப் பணிகளை அமைச்சர் பிமல் ரத்நாயக்க 25.03.2026 அன்று நேரில் சென்று ஆராய்ந்தார்.
குறித்த அனர்த்தத்தினால் நானுஓயா – அம்பேவெல இடையே 14 இடங்களில் நிலச்சரிவு மற்றும் தாழிறக்கங்கள் ஏற்பட்டிருந்தன.
இதில் 13 இடங்களின் பணிகள் தற்போது முழுமையாக நிறைவடைந்துள்ளன.
மிகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்ட எல்ஜின் நீர்வீழ்ச்சிப் பகுதியில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட புனரமைப்புப் பணிகளை அமைச்சர் இதன்போது கண்காணித்தார்.
கடந்த 4 மாதங்களாகக் கடுமையான சவால்களுக்கு மத்தியில் பணியாற்றி வரும் புகையிரதத் திணைக்கள ஊழியர்களின் நலன்கள் மற்றும் வசதிகள் குறித்துக் கேட்டறிந்த அமைச்சர், அவர்களுக்குத் தேவையான அனைத்து ஒத்துழைப்புகளையும் வழங்கப் போவதாக உறுதியளித்தார்.
தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் (NBRO) அங்கீகரிக்கப்பட்ட திட்டத்தின்படி, மண் பாதுகாப்பு முறைகளைப் பின்பற்றி மிகவும் பாதுகாப்பான புகையிரதப் பாதையை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட அனுபவம் வாய்ந்த நிறுவனங்களின் பங்களிப்புடன், வரும் ஜூன் மாத இறுதிக்குள் இப் பணிகளை முழுமையாக முடிக்க எதிர்பார்த்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
தற்போது புகையிரதங்கள் ரம்புக்கனை வரை மட்டுமே இயக்கப்படுகின்றன.
பொருளாதார மற்றும் சுற்றுலாத்துறைக்கு இந்தப் பாதை மிக முக்கியமானது என்பதால், மக்களின் போக்குவரத்துத் துயரைக் குறைக்கப் பணிகள் விரைவுபடுத்தப்படும்.
இந்த விஜயத்தின் போது புகையிரதத் திணைக்களத்தின் அத்தியட்சகர் (மேல் மாவட்டம்) தனுஷ்க திஸாநாயக்க உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.







இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










