வேலை உலகில் வன்முறை, துன்புறுத்தலுக்கு எதிரான சர்வதேச உடன்படிக்கையை அங்கீகரித்த 55 ஆவது நாடாக இலங்கை!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

வேலை உலகில் வன்முறை மற்றும் துன்புறுத்தல்களை ஒழிப்பதற்கான சர்வதேச தொழிலாளர் அமைப்பின் 190 – ஆவது உடன்படிக்கையை அங்கீகரித்த உலகின் 55 – ஆவது நாடாக இலங்கை இணைந்துள்ளது.

இதற்கான உத்தியோகபூர்வ ஆவணம் கடந்த 16 – ஆம் திகதி சர்வதேச தொழிலாளர் அமைப்பினால் இலங்கையிடம் கையளிக்கப்பட்டது.

ஜெனிவாவிற்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி சுமித் திஸாநாயக்க, இந்த ஆவணத்தை சர்வதேச தொழிலாளர் அமைப்பின் பணிப்பாளர் நாயகம் கில்பர்ட் எஃப். ஹூங்போவிடம் கையளித்தார்.

இந்த உடன்படிக்கையை அங்கீகரிப்பதன் மூலம், தொழிலாளர் சமூகத்தின் கௌரவம், சமத்துவம் மற்றும் மதிப்பினைப் பாதுகாப்பதில் இலங்கை கொண்டுள்ள அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளதாக சர்வதேச தொழிலாளர் அமைப்பின் பணிப்பாளர் நாயகம் இதன்போது குறிப்பிட்டார்.

அத்துடன், வன்முறை மற்றும் துன்புறுத்தல்கள் இல்லாத வேலைச் சூழலை உருவாக்குவதற்காக இலங்கை எடுத்துள்ள இச் சிறப்பான நடவடிக்கை மிகவும் முக்கியமானது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அங்கீகரிக்கப்பட்ட உடன்படிக்கைகளுக்கு இணங்க சட்ட மற்றும் நிறுவனக் கட்டமைப்புகளைத் தயாரிப்பதற்கு இலங்கை அரசாங்கம் உள்ளிட்ட தரப்பினருக்கு சர்வதேச தொழிலாளர் அமைப்பின் முழுமையான ஒத்துழைப்பை வழங்கத் தயாராக இருப்பதாகவும் அவர் மேலும் வலியுறுத்தினார்.

இந்நிகழ்வில் உரையாற்றிய ஜெனிவாவிற்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி சுமித் திஸாநாயக்க, இந்த உடன்படிக்கையை அங்கீகரிப்பதன் மூலம் ஒவ்வொரு நபரும் எந்தவித துன்புறுத்தலும் இன்றி வேலைச் சூழலில் வாழ்வதற்கான உரிமையை மதிக்கவும், மேம்படுத்தவும் மற்றும் யதார்த்தமாக்கவும் தற்போதைய அரசாங்கம் கொண்டுள்ள அர்ப்பணிப்பு வெளிப்படுவதாகச் சுட்டிக்காட்டினார்.

மேலும், இந்த உடன்படிக்கையை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான உள்நாட்டு சட்ட ஏற்பாடுகளை அறிமுகப்படுத்தவும், தற்போதுள்ள தொழிலாளர் சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்ளவும் இலங்கை ஏற்கனவே நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

முன்னதாக, சர்வதேச தொழிலாளர் அமைப்பின் 190-வது உடன்படிக்கையை அங்கீகரிப்பதற்கான ஆவணம், கடந்த ஜனவரி மாதம் 08-ஆம் திகதி கொழும்பில் நடைபெற்ற உத்தியோகபூர்வ நிகழ்வின் போது, பிரதி தொழிலாளர் அமைச்சர் மஹிந்த ஜயசிங்கவினால் சர்வதேச தொழிலாளர் அமைப்பின் இலங்கைக்கான பிரதிநிதி ஜொனி சிம்ப்சனிடம் கையளிக்கப்பட்டிருந்தது.

வேலை உலகில் வன்முறை மற்றும் துன்புறுத்தல்களைத் தடுப்பதற்கும், அவற்றை எதிர்கொள்வதற்கும் தெளிவான மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட அடிப்படையை வழங்கும் முதலாவது சர்வதேச சட்ட ஆவணம் இந்த 190-வது உடன்படிக்கையாகும்.

குறிப்பாக, பாலின அடிப்படையிலான வன்முறைகளை ஒழிப்பதும் இந்த உடன்படிக்கையில் உள்ளடங்கியுள்ளமை ஒரு சிறப்பம்சமாகும்.

இதன் மூலம், இந்த உடன்படிக்கையில் கையெழுத்திட்ட உலகின் 55-வது நாடாகவும், தெற்காசியாவில் இரண்டாவது நாடாகவும் இலங்கை இடம்பிடித்துள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects