2027 ஆம் ஆண்டில் தரம் 6 இற்கான புதிய கல்விச் சீர்திருத்தங்கள் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் இந்த மாதத்திற்குள் உரிய கற்றல் தொகுதிகளை அச்சிட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கல்வியமைச்சரான பிரதமர் ஹரிணி அமரசூரிய பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
அதற்கான பாடக் குழுக்கள் நியமிக்கப்பட்டு, கற்றல் தொகுதிகள் மீளாய்வு செய்யப்பட்டுள்ளதுடன் தேவையான மாற்றங்கள் தொடர்பில் கலந்துரையாடல்கள் அனைத்தும் நிறைவடைந்துள்ளதாக சபையில் தெரிவித்த அவர், அதற்கான ஆசிரியர் பயிற்சிகள் ஜூன் மாதத்தில் ஆரம்பிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் 05.05.2026 அன்று இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையில் பதுளை மாவட்ட எம்.பி. சாமர சம்பத் தசநாயக்க எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், கல்விச் சீர்திருத்த நடவடிக்கைகளுக்காக தேசிய மட்டத்திலான வழிநடத்தல் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
அந்த குழுவின் மேற்பார்வையின் கீழ் 2026 ஆம் ஆண்டு தரம் 1 இற்காக ஆரம்பிக்கப்பட்ட கல்விச் சீர்திருத்தங்கள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுகின்றன.
இந்த மாதத்திற்குள் அந்த கற்றல் தொகுதிகளை அச்சிட நடவடிக்கை எடுக்கப்படும் அதேவேளை, அதற்கான ஆசிரியர் பயிற்சிகளும் ஜூன் மாதத்தில் ஆரம்பிக்கப்படுவதுடன் நிதி ஒதுக்கீடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
2027 இல் தரம் 2 இற்கும் புதிய கல்விச் சீர்திருத்தங்கள் ஆரம்பிக்கப்படும். அதற்கான கற்றல் தொகுதிகளை அச்சிடும் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
புதிய கல்விச் சீர்திருத்தங்கள் தொடர்பில் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களைத் தெளிவுபடுத்தும் வேலைத்திட்டம் எதிர்வரும் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் ஆரம்பிக்கப்படும்.
இந்த கல்விச் சீர்திருத்தங்களுக்கு ஏதேனும் தடைகள் ஏற்பட்டால் , அவை கல்விச் சீர்திருத்தங்கள் வேண்டாம் எனக் கூறுபவர்களாலோ அல்லது சீர்திருத்தங்களைக் குழப்பி அரசாங்கத்தை அசௌகரியத்திற்கு உள்ளாக்கும் நோக்கத்தில் தலையிடுபவர்களாலோ மாத்திரமே ஏற்படக்கூடும். அதேவேளை இந்தச் சீர்திருத்தங்களுக்காக உலக வங்கி எந்த உதவிகளையும் செய்யவில்லை என்பதையும் உறுதியாகக் கூற முடியும் என்றும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










