மட்டக்களப்பு மாவட்டத்தில் கனிய வளங்களை முறையாக அகழ்வதற்கான குழுவை அமைப்பதற்கான ஆரம்ப கூட்டம்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் கனிய வளங்களை முறையாக அகழ்வதற்கான குழுவை அமைப்பதற்கான ஆரம்ப கூட்டம் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான சுனில் ஹந்துன்னெத்தி தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜின் ஏற்பாட்டில் இக் கூட்டம் நடைபெற்றது.

மாவட்டத்தில் இயங்கும் தெரிவு செய்யப்பட்ட திணைக்களங்களின் தலைவர்களை உள்ளடக்கி இயற்கை வளங்களை பாதுகாத்து கனிய வளங்களை முறையாக அகழ்வு செய்து முகாமைத்துவம் செய்வதற்கு மாவட்ட ரீதியில் முதல் முறையாக ஒரு குழுவினை உருவாக்கி செயற்படவுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

கனிய வளங்கள் காணப்படும் பகுதிகளை முறையாக அளவீடு செய்து அடையாளப்படுத்துதல் உரிய அனுமதி வழங்கப்பட்ட பகுதிகளில் மட்டுமே அகழ்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதை உறுதிப்படுத்துதல் அகழ்வு நடைபெறும் இடங்களை தொடர்ச்சியாக கண்காணித்தல் உள்ளிட்ட பல விடயங்களில் இக்குழுவானது அதிக கவனம் செலுத்த வேண்டும் என அமைச்சர் இதன் போது பணிப்புரை வழங்கினார்.

மேலும், கனிய வள அகழ்விற்கான அனுமதிப் பத்திரங்கள் இனிவரும் காலங்களில் QR குறியீட்டு (QR Code) முறைமையின் மூலம் வழங்கப்படவுள்ளதாகவும், இதன் மூலம் அனுமதி வழங்கும் செயல்முறையில் வெளிப்படைத்தன்மையும் கண்காணிப்புத் திறனும் மேலும் மேம்படுத்தப்படுமெனவும் தெரிவித்தார்.

அத்துடன், சட்டவிரோதமான கனிய வள அகழ்வுகளில் ஈடுபடுவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும், சம்பந்தப்பட்ட அனைத்து திணைக்களங்களும் ஒருங்கிணைந்த முறையில் செயற்பட்டு சட்டவிரோத அகழ்வுகளை முற்றிலுமாக கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி மாவட்டத்தில் உள்ள கனிய வளங்கள் முதன்மையாக மாவட்டத்தின் அபிவிருத்தித் தேவைகளுக்காகவே பயன்படுத்தப்பட வேண்டும் எனக் குறிப்பிட்டார்.

அதேவேளை, அகழ்வு நடைபெறும் பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தொடர்ச்சியாக திறம்பட கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

மேலும், கனிய வளங்களை அகழ்வதற்கான அனுமதி பெற்றுள்ள நபர்கள் அல்லது நிறுவனங்கள் தொடர்பாக முன்னர் முறைகேடான அகழ்வு குறித்த முறைப்பாடுகள் உள்ளனவா என்பதை உரிய அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்கள், உதவி பிரதேச செயலாளர்கள், கமநல சேவைகள் திணைக்களத்தின் பிரதி ஆணையாளர், பொறியியலாளர்கள், புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் உயர் அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள், விசேட அதிரடிப் படையினர் மற்றும் பல்வேறு அரச திணைக்களங்களின் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அகில இலங்கை ரீதியில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இவ்வாறான பல்துறை ஒருங்கிணைந்த கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டு கனிய வள அகழ்வு, விநியோக நடவடிக்கைகளை கண்காணிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects