மட்டக்களப்பு மாவட்டத்தில் எட்டு பிரதேச செயலக பிரிவுகள் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவப்பிரிவு இன்று (26.11.2025) தெரிவித்துள்ளது.
அதன் அடிப்படையில், தற்போதைய சீரற்ற காலநிலை காரணமாக 62 குடும்பங்களைச் சேர்ந்த 210 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 36 குடும்பங்களைச் சேர்ந்த 132 நபர்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீட்டில் தங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே வேளை, மேலும் 26 வீடுகள் சூழல் காற்றினால் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
இந்த நிலையில், கோறளைப்பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கிரான் – புலிபாய்ந்தகல் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளது, பிரதேச செயலகத்தினூடாக படகு சேவை ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
அத்தோடு, போரதீவுப்பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட வெல்லாவெளி – மண்டூர் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளது. இதனால் பிரதேச செயலகத்தினூடாக உழவு இயந்திரம் மற்றும் லோறி என்பன சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
மாவட்ட செயலக அனர்த்த முகாமைத்துவ பிரிவானது அவசர அனர்தத செயற்பாடுகளுக்காக இன்று (26.11.2025) முதல் 24 மணி நேரமும் சேவையில் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் பிரகாரம், அவசர தொடர்புகளுக்கு 065-2227701 அல்லது 117 இலக்கத்தினை தொடர்பு கொள்ள முடியும்.
இன்று (26.11.2025) காலை 8:30 மணி முதல் பிற்பகல் 2:30 மணி வரையிலான காலப்பகுதியில் மட்டக்களப்பு நகர் பகுதியில் 63.90 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










