வறட்சியான வானிலையில் பாடசாலைச் செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்லும் விதம் குறித்த பரிந்துரைகளை வௌியீடு செய்த கல்வி அமைச்சு!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

தற்போது நிலவும் வறட்சியான வானிலை நிலவரங்களுக்கு மத்தியில், பாடசாலைச் செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்லும் விதம் குறித்த பரிந்துரைகளை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.

கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவவின் கையொப்பத்துடன் அனைத்து மாகாண கல்விப் பணிப்பாளர்களுக்கும் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, பின்வரும் பரிந்துரைகள் குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டும்:

  1. வெப்பத் தசைப்பிடிப்பு (Heat Cramps) – அதிக வியர்வை காரணமாக நீர்ச்சத்துக் குறைபாடு மற்றும் தாது உப்புகள் வெளியேறுவதால் ஏற்படும் தசைப்பிடிப்பு: கை, கால்கள் மற்றும் வயிற்றில் தசை வலி மற்றும் பிடிப்பு ஏற்படும்.

முதலுதவி: அனைத்துச் செயற்பாடுகளிலிருந்தும் விலகி, குளிர்ந்த இடத்தில் ஓய்வெடுத்தல் மற்றும் போதுமான அளவு நீர் அருந்துதல் (ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கும் அரை கிளாஸ் வீதம்).

  1. வெப்பக் களைப்பு (Heat Exhaustion) – அதிக வெப்பநிலை காரணமாக ஏற்படும் கடும் சோர்வு: அதிக வியர்வை, உடல் தளர்ச்சி, மயக்கம்.

முதலுதவி: அனைத்துச் செயற்பாடுகளிலிருந்தும் விலகி, குளிர்ந்த இடத்தில் ஓய்வெடுத்தல் மற்றும் போதுமான அளவு நீர் அருந்துதல் (ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கும் அரை கிளாஸ் வீதம்), குளித்தல், குளிர்ந்த நீரால் உடலைத் துடைத்தல்.

  1. வெப்பத்தாக்கம் (Heat Stroke) – உடலின் வெப்பநிலையை ஒழுங்குபடுத்தும் செயல்முறை செயலிழப்பதால் ஏற்படும் நிலை: அதிக உடல் வெப்பநிலை, நாடித்துடிப்பு மற்றும் சுவாச வேகம் அதிகரித்தல், மனக்குழப்பம், தலைவலி, வலிப்பு, மயக்கமடைதல்.

முதலுதவி: குளிர்ந்த நிழலான இடத்திற்கு அழைத்துச் செல்லுதல், உடலில் உள்ள தேவையற்ற இறுக்கமான ஆடைகளை அகற்றுதல்/தளர்வு செய்தல், குளிர்ந்த நீரால் உடலைத் துடைத்தல். இது மிகவும் ஆபத்தான நிலை என்பதால் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். இவ்வாறான சந்தர்ப்பத்தில் 1990 ஐ அழைத்து ‘சுவசரிய’ நோயாளர் காவு வண்டி சேவையின் உதவியைப் பெறவும் அல்லது அருகிலுள்ள வைத்தியசாலையின் நோயாளர் காவு வண்டியைப் பெற நடவடிக்கை எடுக்கவும்.

பாடசாலைச் செயற்பாடுகளை முன்னெடுத்தல்:

அதிக வெப்பநிலை நிலவும் நாட்களில் மாணவர்கள் வெளிப்புற/விளையாட்டு மைதானச் செயற்பாடுகளில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும்.

பாடசாலை இடைவேளையின் போது கடும் வெயில் உள்ள பகுதிகளில் மாணவர்கள் விளையாடுவதைத் தவிர்க்க வேண்டும்.

மேலதிகமாக நீர் அருந்துவதற்கும் களைப்பைத் தீர்ப்பதற்கும் இரண்டு குறுகிய இடைவேளைகளை வழங்குவது மிகவும் பொருத்தமானது.

நண்பகல் வேளையில் அதிக வெப்பநிலை நிலவும் போது அத்தியாவசியமற்ற சந்தர்ப்பங்களில் மாணவர்களை வெளியே அழைத்துச் செல்வதைத் தவிர்க்க வேண்டும் (பாடசாலையிலும் வீட்டிலும்).

பிராந்திய ரீதியில் நிலவும் வெப்பநிலை/வானிலை நிலவரங்களைக் கருத்திற்கொண்டு இல்ல விளையாட்டுப் போட்டிகள் மற்றும் பயிற்சிகளைத் திட்டமிடுவது சிறந்தது.

வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல்:

தேவையான அளவு குடிநீரை வழங்குவதோடு, சுத்தமான நீரை அதிகளவு பருகுவதற்கு மாணவர்களைத் தூண்டுதல்.

பாடசாலையில் போதுமான நீர் வசதி இல்லையெனில் அதற்கு மாற்று வழிகளைக் கையாளுதல் (மாவட்ட அனர்த்த முகாமைத்து ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர்கள் ஊடாக மாவட்டச் செயலாளரின் உதவியைப் பெறலாம்).

வகுப்பறைகளில் காற்றோட்டம் சீராகக் கிடைப்பதை உறுதி செய்ய கதவு, ஜன்னல்களைத் திறந்து வைத்தல். மின்விசிறிகளைப் பயன்படுத்தினால் சுத்தமான காற்று கிடைக்கக் கதவு, ஜன்னல்கள் கட்டாயம் திறந்திருக்க வேண்டும்.

மாடிக்கட்டிடங்கள் அல்லது தகரக் கூரையிடப்பட்ட அதிக வெப்பம் நிலவும் வகுப்பறைகளைத் தற்காலிகமாகப் பொருத்தமான இடங்களுக்கு மாற்றுதல்.

மாணவர்களின் தனிப்பட்ட தயார்நிலை:

அவசியமான சந்தர்ப்பங்களில் கழுத்துப்பட்டி (Tie) அணிவதைத் தவிர்க்க வேண்டும் அல்லது அதன் முடிச்சைத் தளர்வாக வைத்திருக்க வேண்டும்.

அரைக்கச்சை (Belt) அணிவதைக் கூடியவரை குறைத்தல்.

அதிக வெயில் நிலவும் போது தலைக்கவசம் அல்லது குடையைப் பயன்படுத்துதல்.

அடர் நிற ஆடைகளுக்குப் பதிலாக தளர்வான, மெல்லிய நிற பருத்தி (Cotton) ஆடைகளை அணிதல் (பாடசாலைக்கு பின்னரான செயற்பாடுகளுக்கும் இது பொருந்தும்).

வீட்டிலிருந்து வெளியே செல்லும் போதெல்லாம் காய்ச்சி ஆறவைக்கப்பட்ட குடிநீர் போத்தலை எடுத்துச் செல்லுதல்.

சாதாரண நாட்களை விட அதிகளவு நீர் அருந்துதல். நீருக்குப் பதிலாக இளநீர் போன்ற பானங்களை அருந்துவது சிறந்தது. எக்காரணம் கொண்டும் அதிக சீனி கொண்ட மென்பானங்களை அருந்தக் கூடாது. தாகம் இல்லாவிட்டாலும் அதிகளவு நீர் அருந்துதல் வேண்டும்.

அதிக வெப்பம் உணரப்படும் போது முகம், கைகள் மற்றும் கால்களைக் குளிர்ந்த நீரால் நனைத்தல்.

அதிக வெப்பம் காரணமாக ஏதேனும் நோய் அறிகுறிகள் தென்பட்டால் ஆசிரியர் அல்லது பெரியவர்களிடம் அறிவித்து உடனடியாக மருத்துவ ஆலோசனையைப் பெறுதல்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects